ஓமலூர், ஜூலை 29: ஓமலூர் ரயில்வே மேம்பாலம் லாரி கவிழ்ந்த விபத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள ரயில்வே மேம்பாலம் வழியாக மேட்டூர், சங்ககிரி, ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த பாலத்தில், அரிதாக விபத்து நடந்து வந்த நிலையில், கடந்த 6 மாதமாக விபத்து தொடர்ச்சியாக நடக்கிறது. இந்த சாலையின் கான்கிரீட் தளத்தில், 7 மாதம் முன்பு தார் ஊற்றி புதுப்பிக்கப்பட்டது. இந்த பாலத்தில் மட்டும் கடந்த 7 மாதத்தில் 10க்கும் மேற்பட்ட விபத்துக்கள், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
நேற்று கொங்கணாபுரத்தில் இருந்து ஐதாராபாத்துக்கு பருத்தி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி, ஓமலூர் ரயில்வே மேம்பாலத்தின் வளைவில் திரும்பும்போது, முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல லாரி ஓட்டுநர் ஹரிபாபு முற்பட்டுள்ளார்.
அப்போது லாரி டயர்களுக்கு கிரிப் கிடைக்காமல் பாலத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், லாரியை ஓட்டி வந்த தாரமங்கலத்தை சேர்ந்த ஹரிபாபுவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. எதிரே டூவீலரில் வந்த தாரமங்கலத்தை சேர்ந்த சபரிபாலன் மீது லாரி கவிழ்ந்ததில், காலில் அடிபட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தால் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை ஓமலூர் போலீசார் சீரமைத்தனர். மேம்பாலத்தில் தொடரும் விபத்தை தடுக்க சாலையை உரிய ஆய்வு செய்து, சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.