Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அனைத்து மனநல நிறுவனங்களும் ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம்

சேலம், ஆக. 18:சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும், ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:சேலம் மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநல பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்கு ஆளானவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள், மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இத்தகைய மனநல நிறுவனங்கள் அனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம் 2017-ன்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். சேலம் மாவட்டத்தில் மனநல மையங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணையதள முகவரியிலோ, தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 044-26420965 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள், நிறுவனங்கள் ஒரு மாத காலத்திற்குள் மேற்காணும் தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறினால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.