ஓமலூர், நவ.11: ஓமலூர் ஒன்றியம், எட்டிகுட்டப்பட்டி ஊராட்சியில் மாட்டுக்காரனூர், இந்திராநகர் மேல் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட மின்கம்பம் மிகவும் பழுதடைந்து உள்ளது. கான்கிரீட் பெயர்ந்து, உள்ளே இருந்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. அதனால், மழை காலங்களில் மின்கம்பம் விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக, பழுதடைந்த கம்பத்தை மாற்றி விட்டு புதிய கம்பம் நட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement

