ஆட்டையாம்பட்டி, நவ.11: வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட ஆட்டையாம்பட்டியில், எஸ்ஐஆர் பற்றி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக ஆட்டையாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் தன்னார்வர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த 4ம்தேதி முதல் போலி வாக்காளர்களை கண்டுபிடிக்கும் விதமான ஆதார் கார்டு இணைக்கும் எஸ்ஐஆர் என்னும் பூத் ஸ்லீப் வீடு வீடாக சென்று ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டு, அதனை பூர்த்தி செய்யும் பணி பற்றிய கலந்தாய்வு நடைபெற்றது. எஸ்ஐஆர் விண்ணப்பத்தை வாக்காளரிடம் வழங்கி, விரைவில் முடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து சேலம் வருவாய் கோட்டாட்சியர் உதயகுமார் தலைமையில், சேலம் தெற்கு தாசில்தார் ஸ்ரீதர், சேலம் தெற்கு தேர்தல் துணை தாசில்தார் ஹரி, ஆட்டையாம்பட்டி பேரூராட்சி நிர்வாக அலுவலர் விஜயா மற்றும் விஏஓ சரவணன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, எஸ்ஐஆர் விண்ணப்பம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விழிப்புணர்வு பேரணி ஆட்டையாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ராசிபுரம் மெயின் ரோடு வழியாக பஸ் நிலையத்தை வந்தடைந்தது.

