சேலம், செப்.2: மின்னாம்பள்ளி அருகே புதிதாக செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், மின்னாம்பள்ளி அடுத்த ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு ஒன்றை அளித்தனர். அதில், ‘‘ரயில்வே கேட் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். தற்போது அப்பகுதியில் புதிதாக செல்போன் டவர் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதனால், கதிர்வீச்சு, ஒலி மாசுபாடு, உடல்நல பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. எனவே, டவர் அமைக்க தடை விதிக்க வேண்டும்,’’ என வலியுறுத்தினர்.
இதேபோல், தும்பிப்பாடி பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவர், மனு அளிக்க வந்தார். திடீரென நுழைவு வாயில் பகுதியில் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது மகன்கள், தன்னை கண்டுகொள்ளாமல் விட்டதாக புகார் தெரிவித்தார்.