பேராவூரணி , ஜூலை 13: பேராவூரணியில் சாலை எல்லை கோட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்ட பைக்கிற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அம்மையாண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். பள்ளிவாசல் அருகில் உள்ள டீக்கடை முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் நெடுஞ்சாலை கோட்டுக்கு வெளியே சிறிது இருந்தது.
அங்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் கையில் வைத்திருந்த கருவியில் பைக் எல்லை தாண்டி நின்றதற்காக அபராதம் என பிரின்ட் பேப்பரை கையில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். பேப்பரை வாங்கி பார்த்த ராமலிங்கத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இதேபோல் பல இடங்களில் அபராதம் விதிக்கப்படுவதால் கடைவீதிக்கு வாகனங்களில் வர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் கடைவீதி வியாபாரிகள் பொதுமக்கள் வரத்து குறைவால் வியாபாரம் இல்லை என புலம்புகின்றனர்.