குடியாத்தம், ஜூலை 26: பரதராமி அருகே பைக்கில் சென்ற பிரியாணி கடைக்காரரை வழிமறித்து ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் முத்தியார்(37), பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது நண்பர் நூருதீன்(31) என்பவருடன் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திற்கு தொழில் சம்பந்தமாக பைக்கில் சென்றுள்ளார். பின்னர், மீண்டும் இருவரும் குடியாத்தம் அடுத்த பரதராமி வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பரதராமி பகுதியில் திடீரென இவர்களது பைக்கை மர்ம நபர்கள் சிலர் மறித்து, பிரியாணி கடைக்காரர் முத்தியார் வைத்திருந்த பையை பிடுங்கி கொண்டு பைக்கில் தப்பிச்சென்று விட்டனர். அதில், ரூ.2 லட்சம் பணம் இருந்தது.
இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற முத்தியார் பரதராமி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து சந்தேகத்தின்பேரில் அவரது நண்பர் நூருதீனிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் ஆட்களை வைத்து பைக்கை வழிமறித்து பணம் பறித்தது தெரியவந்தது. தொடர்ந்து, நூருதீனிடமும், அவர் அனுப்பி வைத்த ஆட்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.