சமயபுரம், மார்ச் 19: மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகனூர் கிராம ஊராட்சியில் ஆயிரம் குடும்பத்தித்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு காணப்படாமல் இருந்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சர்வீஸ் சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. வாகனங்கள் 2 கிலோ மீட்டர் தொலைவு வரை அணிவகுத்து நிற்கின்றது. தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாலை 5 மணியளவில் உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி தண்ணீர் திறக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.