தஞ்சாவூர், ஜூலை 14: நாஞ்சிக்கோட்டை பகுதிக்கு செல்லும் சாலையில் மருங்குளம் கிராமம் உள்ளது. மருங்குளத்தை சுற்றி புதுநகர், மின்னாத்தூர், வடக்குபட்டு, நடுவூர், வல்லுண்டான்பட்டு, வேங்கராயன்குடிகாடு, ஈச்சங்கோட்டை, சூரியம்பட்டி, கொல்லங்கரை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
மருங்குளத்தில் இருந்து அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கும் மற்றும் கரம்பக்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, செல்லம்பட்டி, குருங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலைகள் பிரிந்து செல்வதால் இந்த சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக இருக்கிறது. இந்நிலையில் மருங்குளத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்கு நேரடியாக பஸ் போக்குவரத்து வசதி இல்லை.
எனவே பொதுமக்கள் தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் அவசர காலத்தில் சிகிச்சை பெற மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மருங்குளத்தில் இருந்து ஈ.பி. காலனி வழியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரடியாக பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.