சாத்தூர், ஜூலை 14: சாத்தூர் மார்க்கமாக செல்லும் திருச்செந்துார் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை வழியாக பாலக்காடுக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த சேவைக்கு சாத்தூர், விருதுநகர் பகுதி மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.
இப்பகுதிகளில் இருந்து நாள்தோறும் சராசரியாக, 300க்கும் அதிகமான பயணிகள் இந்த ரயிலில் பயணிக்கின்றனர். இந்நிலையில், இந்த ரயிலில், போதிய பெட்டிகள் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிக பயணிகள் ஏறுவதால், இடநெருக்கடி ஏற்பட்டு, முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் சாத்தூர் மார்க்கமாக செல்லும் திருச்செந்தூர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.