Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் ஷட்டர்களை சீரமைக்கும் பணி: விரைவில் முடிக்கப்படும் என அதிகாரிகள் தகவல்

பல்லாவரம், ஜூலை 21: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி நீர்த்தேக்க ஷட்டர்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. இந்த ஏரியில் இருந்து தினந்தோறும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காகவும், பெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள சிப்காட்டிற்கும் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. பருவமழையின்போது இந்த ஏரி நிறைந்ததும், 5 கண் மதகு மற்றும் 19 கண் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுவது வழக்கம். நேற்றைய நிலவரப்படி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில், ஏரியின் நீர் மட்டம் 14.84 அடி உயரமாகவும், மொத்த கொள்ளளவு 1502 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 310 கன அடியாகவும் இருந்தது.

பொதுவாக ஏரியின் நீர்மட்ட உயரம் 24 அடியில், 22 அடி உயரத்தை எட்டினாலே பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவது வழக்கம். தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் உள்பகுதியில் மதகுகள் முழுமையாக தெரியும் அளவிற்கு நீர் குறைந்து காணப்படுவதால், பருவ மழைக்கு முன்பு செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளை சீரமைக்கும் பணிகளை அதிகாரிகள் தற்போது தொடங்கியுள்ளனர்.

முதற்கட்டமாக செம்பரம்பாக்கம் ஏரியின் 19 கண் மதகுகளில் உள்ள ஷட்டர்களை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 19 கண் மதகுகளில் உள்ள ஷட்டர்கள் அதன் ஓரங்களில் நீர்க்கசிவு ஏற்படாமல் இருக்க ரப்பர் சீல் மற்றும் மின் மோட்டார்கள், அளவு கோல் உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கிரேன் உதவியுடன் ஷட்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து, 5 கண் மதகு கரைகளை பலப்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெறும் என்று பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 5 கண் மதகு முழுமையாக சீரமைக்கப்பட்ட நிலையில் தற்போது 19 கண் மதகை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், இந்த ஆண்டு பருவ மழை அதிகளவு இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், சுமார் 10 நாட்களில் இந்த பணிகள் முடிவடைந்து வண்ணம் பூசும் பணிகள் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பருவ மழைக்கு முன்பு நீர் வரத்துக் கால்வாய்களை தூர் வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூண்டி நீர்த்தேக்கம்: இதேபோல் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கமாகும். இந்த நீர்த்தேக்கம் 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த 2019ம் ஆண்டு வரை 4 முறை மட்டுமே முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. கடந்த 2015ல் ஒரு லட்சம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு முதல் வருடம் தோறும் மழைக்காலங்களில் நீர் நிரம்பி விடுவதால் உபரி நீரை தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர். உபரி நீர் திறக்கப்பட்டு அது வீணாக கடலில் சென்று சேர்ந்துவிடுகிறது. இதனால் ஏரியின் நீர் மட்டத்தையும், நீர் இருப்பையும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது.

இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணையிலிருந்து உபரி நீர் வெளியேறும் வகையில் கட்டப்பட்ட நீர்த்தேக்கமானது 800 அடி நீளத்தில் 50 அடி உயரத்தில் மொத்தம் 16 ஷட்டர்களுடன் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையால் பூண்டி நீர்தேக்கம் நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றிய நிலையில் 8, 9 ஆகிய 2 ஷட்டர்கள் சேதம் அடைந்தது. இதனால் கடந்த 2021ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டதால், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகமாகி 8 மற்றும் 9 ஆகிய 2 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறியது. இதனால் பழுதடைந்த 8 மற்றும் 9 ஆகிய 2 ஷட்டர்கள் ₹2.12 கோடி மதிப்பில் தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது மொத்தம் உள்ள 3,231 மில்லியன் கனடியில் 150 மில்லியன் கன அடிக்கும் குறைவாக நீர் இருப்பதாலும், ஆகஸ்ட் மாதத்தில் மழைக்காலம் தொடங்க இருப்பதாலும் கூடுதலாக ₹9.48 கோடி மதிப்பில் 16 ஷட்டர்களையும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த ஷட்டர்கள் சீரமைப்பு பணியினை நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள்மொழி, உதவி செய்ய பொறியாளர் பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இனிவரும் காலங்களில் உபரி நீரை அதிகளவில் வெளியேற்றும் நிலை வரும்போது பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள்மொழி தெரிவித்தார். மேலும் ஷட்டர்களை ஏற்றும்போதும், இறக்கும்போதும் எளிதில் இருக்கும் வகையில் ஆயில் சர்வீஸ், பெயின்டிங் மற்றும் கூடுதல் பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஷட்டர்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.