திருச்சி, ஜூலை 8: தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று மாநிலம் தழுவிய ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் பிச்சைபிள்ளை தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பொன்னர் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் செல்வமணி வரவேற்று பேசினார்.அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் எடையாளர் நியமனம் செய்ய வேண்டும், திருச்சியில் கூட்டுறவுத் துறையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை களைய வேண்டும், நியாய விலைக் கடைகளுக்கு சேதார கழிவு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தின்போது கோஷங்களை எழுப்பினர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் வழங்கிவிட்டு கலைந்து சென்றனர்.