தேவகோட்டை, செப்.23: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தேவகோட்டை கிளை சார்பாக 800 ஆண்டுகள் பழமையான சமணர் சின்னமாக கருதப்படும் அனுமந்தக்குடியில் அமைந்துள்ள 23ம் தீர்த்தங்கர் - மாளவநாதர் என்ற பாஸ்வநாதர் ஆலயத்தில் கலை இலக்கிய கூடுகை நிகழ்வு நடைபெற்றது. கிளைத் தலைவர் போஸ் தலைமை வகித்தார். ஆசிரியர் தேவேந்திரன் பாடல் பாடினார். பிரபஞ்சனின்-தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் நூலை அறிமுகம் செய்து ஜீவானந்தம் பேசினார். ஆசிரியர் கணேசன் கவிதை வாசித்தார். செல்வி காஷ்வி சிறார் கதை சொன்னார். காலத்தின் குரல் என்கிற தலைப்பில் அமைப்பின் வரலாற்றை முன்வைத்து மாவட்ட செயலாளர் முனைவர் அன்பரசன் பேசினார். கூட்டத்தில் அக்.4,5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாவட்ட மாநாட்டிற்கான பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
+
Advertisement