சிவகங்கை, ஆக.22: அரசு மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் தவணை தொகை செலுத்தாத நிலையில் வட்டி தள்ளுபடி போக மீதி தொகையை ஒரே தவணையாக செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் ராமநாதபுரம் வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட திட்டப் பகுதிகளில் உள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் (சுயநிதி திட்டம் (ம) வணிக மனைகள் நீங்கலாக) ஒதுக்கீடு பெற்று, 31.3.2015ம் தேதிக்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்றும், தவணைத் தொகை செலுத்தாத ஒதுக்கீடுதாரர்கள், வருகின்ற 31.3.2026ம் தேதிக்குள் வட்டி தள்ளுபடி போக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை ஒரே தவணையாக செலுத்தி பயன்பெறலாம்.
அதில், மாதத் தவணைக்கான அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி முழுமையாக தள்ளுபடி, நிலத்திற்கான இறுதி விலை வித்தியாச தொகையில், ஒவ்வொரு ஆண்டுக்கும் 5மாத வட்டி தள்ளுபடி போன்ற வட்டி தள்ளுபடி சலுகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 31.3.2015ம் தேதிக்கு முன்னர் தவணை காலம் முடிவுற்ற ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத் தொகையினை அறிந்து, ஒரே தவணையில் தொகையினை செலுத்தி, குறிப்பிட்டுள்ள வட்டி சலுகை திட்டத்தின் மூலம் பயன்பெற்று, கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். எனவே தவணைத் தொகை சரிவர செலுத்தாத ஒதுக்கீடுதாரர்கள் இச்சலுகையினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.