சிவகங்கை, ஆக.22: சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே லாரி உரிமையாளர் மரணத்திற்கு ரோந்து போலீசாரே காரணம் என்று கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினகரன்(36). இவரது மனைவி ரோஜா(25), மகள் சிவான்ஷிகா(3) மற்றும் 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். தினகரன் சொந்தமாக மூன்று லாரிகள் வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சிவகங்கை அருகே காயங்குளம் பகுதியில் பனைமரத்தில் தினகரனின் டூவீலர் மோதி இறந்து கிடந்தார். மானாமதுரை சிப்காட் போலீசார் தினகரனின் உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த தினகரனின் உறவினர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.
இதுபற்றி உறவினர்கள் கூறுகையில், ‘‘இறந்த தினகரனுக்கு சொந்தமான லாரி பழுதாகி நின்றதாகவும், ரோந்து வாகன போலீசார் லாரி டிரைவரை மிரட்டினர். இதனால் சம்பவ இடத்திற்கு வந்த தினகரனையும் ரோந்து போலீசார் விரட்டி சென்றதால் மரத்தில் மோதி உயிரிழந்துள்ளார்’’ என கூறினர். இதனால் மரணத்துக்கு காரணமாக நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை-இளையான்குடி சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை டிஎஸ்பி அமல அட்வின், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் தாசில்தார் சிவராமன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.