‘கார்த்திகை மாதம் மாலை அணிந்து... நேர்த்தியாகவே விரதம் இருந்து...’ மண்டல விரதத்தை துவங்கிய ஐயப்ப பக்தர்கள்
ராமநாதபுரம், நவ. 18: கார்த்திகை மாத முதல் நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் கடலில் தீர்த்தமாடி மாலை அணிந்து மண்டல விரதத்தை துவங்கினர். கேரளா மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பனுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் கார்த்திகை 10ம் தேதி வரை மாலை அணிந்து ஒரு மண்டலம் 45 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி சென்று வருவது வழக்கம். நேற்று கார்த்திகை மாதம் முதல் நாள் என்பதால் ராமநாதபுரம், ரெகுநாதபுரம், ராமேஸ்வரம், தேவிப்பட்டிணம், மண்டபம், திருப்புல்லாணி, நயினார்கோயில், பரமக்குடி, திருஉத்தரகோசமங்கை, திருவாடனை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், கடலாடி, சாயல்குடி, கமுதி, அபிராமம், முதுகுளத்தூர், சிக்கல், ஆப்பனூர், ஏ.புனவாசல் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலிருந்து ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதல் ராமேஸ்வரம், தேவிப்பட்டிணம், கடலாடி மாரியூர்,சேதுக்கரை உள்ளிட்ட புனித தீர்த்த கடல்கள்,பரமக்குடி வைகை ஆறு, கோயில் தெப்பங்குளங்களில் புனித நீராடினர்.
கருப்பு,நீலம், காவி நிற ஆடைகளை அணிந்து பிறகு அந்தந்த ஐயப்பன் கோயில்களில் குருசாமிகள் முன்னிலையிலும், வீடுகளில் பெற்றோர் முன்னிலையிலும் ருத்ராட்சம், துளசி உள்ளிட்ட மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.
மாலை அணிவித்தலை தொடர்ந்து ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் குருநாதர் மோகன்சாமி முன்னிலையில் ஐயப்பனுக்கு 18 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள், நெய்யாபிஷேகம் நடந்தது. பிறகு கன்னிசாமி முதல் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கடலாடி சார்பதிவாளர் அலுவலகம் அருகிலுள்ள சபரிதோட்டம் ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத முதல்நாள் சிறப்பு பூஜை மாலையில் குருநாதர் கருப்பையா தலைமையிலும், சற்குரு மகேந்திரன் முன்னிலையிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதுபோல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள தர்மசாஸ்தா கோயிலில் குருநாதர் நாகராஜசாமி தலைமையிலும், சற்குருநாதர் சுப்ரமணியன் முன்னிலையில் ஐயப்பனுக்கு நெய், பால், இளநீர் உள்ளிட்ட 18 வகை அபிஷேகம் நடந்தது, பொங்கலிட்டு, பழங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், படி பூஜை நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. முதுகுளத்தூர் மின்சார வாரிய அலுவலகம் அருகிலுள்ள ஐயப்பன் கோயிலில் கணபதிஹோமம், படி பூஜை, அன்னதானம் நடந்தது.
ராமேஸ்வரத்தில் புனித நீராடல்
கார்த்திகை பிறந்ததை முன்னிட்டு முதல் நாளான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நந்திஸ்வரர் அருகே உள்ள விநாயகர் சன்னதியில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர். முன்னதாக அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி பின் கோயில் உள்ளே 22 புண்ணிய தீர்த்தங்களும் நீராடினர். ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் என தீவு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்ததால் காலையில் கோயிலில் கூட்டம் அலைமோதியது. சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜை கார்த்திகை மாதம் முதல் தேதி துவங்குவதால் பெருமளவு ஐயப்ப பக்தர்கள் இந்நாளில் மாலையணிந்து விரதம் துவங்குகின்றனர். மேலும் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி முன்பு வட மாநில பக்தர்கள் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.


