ராமநாதபுரம், ஆக.18: தேவிப்பட்டிணத்தில், அரசு பஸ் மோதி டைம் கீப்பர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகே உள்ள கொத்தியார் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமு (65). தேவிப்பட்டிணம் பஸ் நிலையத்தில் தற்காலிக டைம் கீப்பராக பணியாற்றி வந்தார். நேற்று பஸ் நிலையத்தில் வழக்கம்போல், பஸ் புறப்படும் நேரம் குறித்து பயணிகளுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தார்.
அப்போது பஸ் நிலையத்திலிருந்து இருந்து பரமக்குடிக்கு புறப்பட்டுச் சென்ற அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பஸ்ஸை ஒட்டி வந்த டிரைவர் கந்தசாமி, மற்றொரு பஸ்ஸில் ஏறி தப்பிச்சென்றார். இது குறித்து தகவலறிந்து வந்த தேவிப்பட்டிணம் போலீசார், உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பிய கந்தசாமியை பிடித்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.