தொண்டி, நவ.15: அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெடி வைத்து மீன் பிடிப்பது தொண்டி பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நடுகடலின் ஆழமான பகுதியில் மரங்களை வேறுடன் பிடிங்கி நட்டு வைக்கப்படும். இந்த மரங்களின் அருகில் ஆயிரக்கணக்கான மீன்கள் கூட்டமாக வசிக்க வரும் அவ்வாறு வரும் போது வெடியை வெடிக்க செய்து அனைத்து மீன்களையும் பிடித்து விடுகின்றனர். இதனால் மரங்கள் அகற்றப்படாமல் அங்கையே இருப்பதால் நாட்டுப் படகு மீனவர்கள் வலைகளை இழுத்து வரும் போது மரங்களில் சிக்கி வலைகள் அறுபடுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், வெடி வைத்து மீன் பிடிப்பதால் மீன் குஞ்சுகளும் இறப்பதால் மீன் இனம் அழியும் அபாயம் உள்ளது. ஒரே நேரத்தில் டன் கணக்கில் மீன் இறப்பதால் சக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அவர்கள் கடலில் வைத்துள்ள மரங்களில் சிக்கி பல ஆயிரம் மதிப்புள்ள வலைகளும் அறுந்து விடுகிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. வெடி வைத்து மீன் பிடிப்பதை முற்றிலும் ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
