மண்டபம்,செப்.15: மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு தொடக்கப் பள்ளியில், வகுப்பறை கான்கிரீட் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து வருவதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான காந்தி நகர் பகுதியில் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் அமைந்துள்ள வகுப்பறைகளின் கட்டிட மேற்கூறை கான்கீரிட்டால் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த கட்டிடத்தின் சுவர்கள் விரிவடைந்தும் அதுபோல கான்கிரீட் மேற்கூரை கட்டிடத்தை சுற்றி விரிவடைந்தும் சேதம் அடைந்து வருகிறது.
வரும் நவம்பர், டிசம்பர் மாதம் பெய்யும் மழை காலங்களில் இந்த கட்டிடத்தின் மேல் மழைநீர் தேக்கம் அடைந்து ஏதேனும் பெரிய அளவில் விரிவடைந்து சேதமடைந்து பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமான சூழ்நிலை உள்ளது. அதனால் சேதம் அடைந்து வரும் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென காந்தி நகர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.