மண்டபம், அக்.13: மண்டபம் பேரூராட்சியில் கால்நடைகளை கடித்தும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த தெரு நாய்களையும், பன்றிகளையும் பிடிக்கும் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. மண்டபம் பேரூராட்சி 18 வார்டுகளிலும் தெரு நாய்கள், பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆடு மற்றும் கோழிகளை கடித்து கொன்று விடுவதால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
ஆதலால் மண்டபம் பகுதியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க அக்.26ல் நடந்த பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் செயல் அலுவலர் மாலதி ஆலோசனைப்படி இளநிலை உதவியாளர் முனியசாமி மேற்பார்வையில் துப்புரவு மேற்பார்வையாளர் கோவிந்தராஜன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேற்று மண்டபம் பகுதியில் தெருக்களில் சுற்றி திரிந்த 85 நாய்கள் மற்றும் 12 பன்றிகளை 2 நாட்களாக போராடி பிடித்தனர். அதன் பின்னர் வாகனத்தில் கொண்டு சென்று வெளியூர்களில் பொதுமக்கள் வசிக்காத பகுதிகளில் கொண்டு விட்டனர்.