திருவாடானை, அக். 11: திருவாடானை அருகே மங்களக்குடி ஊராட்சி, ஊமை உடையான்மடை பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மங்களக்குடி-நீர்க்குன்றம் நெடுஞ்சாலை பிரிவில் இருந்து ஊமை உடையான்மடை பகுதிக்கு செல்லும் சுமார் 2 கிமீ தூரமுள்ள பிரதான சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலையாக போடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலையில் அமைக்கப்பட்ட ஜல்லிக்கற்கள் பெயர்ந்ததால் சாலை மிகவும் சேதமடைந்து அவ்வழியாக செல்லும் வாகனங்களை பதம் பார்ப்பதோடு தற்சமயம் பயன்பாட்டிற்கு லாயக்கற்ற சாலையாக மாறிவிட்டது. இதனால், அவசரகால சிகிச்சை மற்றும் பிரசவம் உள்ளிட்ட மருத்துவ உதவிக்காக 108 ஆம்புலன்ஸை அழைத்தால் கூட அப்பகுதிக்கு செல்ல முடியாத சூழல் நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலையாக மாற்றி தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement