திருவாடானை, அக்.9: திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி உயர்கல்வி மன்ற நிதி உதவியுடன் 33 கலைப் போட்டிகள் இரண்டு கட்டமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த கல்லூரியில் கலைத் திருவிழாவின் முதற்கட்ட போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்று முடிவடைந்தது. மேலும் இரண்டாம் கட்ட போட்டிகள் கடந்த அக்.6ம் தேதி முதல் இரு தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்விற்கு கல்லூரியின (பொ) முதல்வர் முனைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். கலைத்திருவிழா போட்டியில் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு வலையொலி பரப்பு, தற்காப்பு கலை, பட்ஜெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. மேலும் கல்லூரியில் நடைபெற்ற அனைத்து போட்டிகளுக்கும், போட்டியின் நடுவர்களாக பல்வேறு அரசுக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை தலைவர் மணிமேகலை செய்திருந்தார். இந்த நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement