முதுகுளத்தூர் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1,200 கோடியில் திட்டப் பணிகள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பெருமிதம்
ராமநாதபுரம், ஆக.9: முதுகுளத்தூர் தொகுதியில் மட்டும் ரூ.1,200 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொகுதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வனம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை வகித்தார். இதில் கடலாடி, சாயல்குடி, சிக்கல், கமுதி, முதுகுளத்தூர், தேரிருவேலி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர், உரிய துறைகளின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து தனியார் கூட்டரங்கில், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் பேசுகையில், பள்ளி மாணவர்கள் முதல் மகளிர், முதியோர் வரை அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் பல எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்துள்ளார். நாள்தோறும் புதுப்புது திட்டங்களை வழங்கி வருகிறார். முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கடலாடி, முதுகுளத்தூர் மற்றும் கமுதி ஆகிய 3 யூனியன்களில் குடிநீர், சாலை, மின்சாரம், சுகாதாரம், கல்வி கட்டிடங்கள், பாசன கண்மாய், வரத்து கால்வாய் மராமத்து என முக்கிய அடிப்படை தேவைகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.1,200 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்துள்ளது. அதில் சில பணிகள் நடந்து வருகிறது. பேருந்து செல்லாமல் இருந்த குக்கிராமத்திற்கும் தற்போது 64 அரசு பஸ்கள், மினிபஸ் போக்குவரத்து இயக்கப்பட்டுள்ளது. 164 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வறட்சி மற்றும் கனமழையால் பாதிக்கப்படும் போது விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை பெற்று தரப்பட்டுள்ளது. இது போன்று 5 ஆண்டுக்குள் அனைத்து அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாறிவிடும். எனவே கடந்த அதிமுக ஆட்சியில் எவ்வித வளர்ச்சி இன்றி முடங்கி கிடந்த முதுகுளத்தூர் தொகுதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் முன்னேறி வருவதை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி உறுப்பினராக சேர்க்க வேண்டும். நிர்வாகிகள், வாக்குச்சாவடி மைய பொறுப்பாளர்கள் மீண்டும் திமுக ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் தொகுதி பார்வையாளர் வேல்முருகன், திமுக ஒன்றிய செயலாளர்கள் பூபதிமணி, சண்முகம், ஆறுமுகவேல், சண்முகநாதன், நகர செயலாளர்கள் ஷாஜகான், வெங்கடேஷன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.