தொண்டி, நவ.7: முகிழ்த்தகம் ஏசுபுரம் சாலையை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகே முகிழ்த்தகம் ஏசுபுரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து நம்புதாளைக்கு செல்லும் சாலை பல வருடங்களாக மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதால், பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்வோர் வரை அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். பல வருடங்களாக சாலை சரி செய்யப்படாததால், போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக உள்ளது.
இந்த சாலையை சரி செய்ய கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தோம். ஆனால் எந்த பலன் இல்லை என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியை சேர்ந்த பார்த்தீபன் கூறியது, பத்து வருடங்களுக்கு மேலாக ரோட்டை செப்பனிடாததால், குண்டும் குழியுமாக உள்ளது. சாலை மோசமாக இருப்பதால், பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் டூவீலரில் செல்வோர் வரை அடிக்கடி கீழே விழுகின்றனர். ரோட்டின் இருபுறமும் கருவேலம் மரம் வளர்ந்து டூவீலரில் செல்வோரை பதம் பார்த்து விடுகிறது. முகிழ்த்தகம் மற்றும் நம்புதாளை ஊராட்சி அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

