மண்டபம், டிச. 4: மண்டபத்தில் பெய்த கனமழையால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் 2வது நாளான தீவிரமாக ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதியான மண்டபம் பேரூராட்சியில் டிட்வா புயலின் தாக்கத்தால் கடந்த நவ.26ம் தேதி முதல் நவ.30ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களாக கடுமையான மழை பெய்தது. இதனால் மண்டபம் நகரில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் சுமார் 3 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. இதனால் மாணவிகள் வகுப்பறைகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். மேலும் பள்ளி வளாகத்தை சுற்றி தனியார் நிலம், வீடுகள் இருப்பதால் தேங்கிய மழைநீரை வெளியில் கடத்துவது சிரமமாக இருந்தது. மேலும் வெயில் அடித்தால் மட்டுமே மழைநீர் காயும் சூழ்நிலை இருந்தது. இதுகுறித்து மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், இளநிலை உதவியாளர் முனியசாமி ஆகியோர் ஆய்வு நடத்தி மழைநீரை வெளியேற்ற முடிவு செய்தனர். இதற்காக நேற்று முன்தினம் பிளாஸ்டிக் ஓசுகள் உள்பட கூடுதலான உபகரணங்களை வாங்கி சக்திவாய்ந்த ராட்சத மோட்டார்கள் மூலம் பள்ளி வாளகத்தில் தேங்கிய மழைநீரை கடல் பக்கம் வெளியேற்றும் பணியை பேரூராட்சி பணியாளர்கள் துவக்கினர். தொடர்ந்து நேற்று 2வது நாளாக மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
+
Advertisement

