திருவாடானை, டிச.4: திருவாடானை அருகே முட்புதர்கள் மண்டி சேதமடைந்த மகளிர் சுகாதார வளாகத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை அருகே பாண்டுகுடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த மகளிர் சுகாதார வளாகக் கட்டிடம் உரிய பராமரிப்பு இன்றி பயன்பாடு இல்லாமல் இருந்தது. இதனால் இந்த கட்டிட வளாகத்தின் உள்பகுதியில் முட்புதர்கள் மண்டி மரங்கள் வளர்ந்துள்ளன. மரங்களின் வேர்கள் கட்டிடத்தை சேதப்படுத்திவிட்டன.
மேலும் இந்த சுகாதார வளாகத்திற்குள் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட கழிவறைகளின் கதவுகள் உடைந்து சேதமடைந்துவிட்டன. மழைக்காலங்களில் சுகாதார வளாகத்தின் சுவர்களில் மழைநீர் இறங்கியதால் ஊறல் ஏற்பட்டு விரிசல் அடைந்துள்ளது. இதனால் சுகாதார வளாகம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் பயன்பாடின்றி கிடக்கும் சுகாதார வளாகக் கட்டிடத்தில் இரவு நேரங்களில் சிலர் மது அருந்திவிட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே பயன்பாடின்றி முட்புதர்கள் மண்டிய நிலையில் சேதமடைந்துள்ள சுகாதார வளாகக் கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

