ராமநாதபுரம், டிச. 6: தேசிய தர வரிசையில் வேளாண்மை மற்றும் நீர் வளத் துறையில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது, ‘‘முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் நிதி ஆயோக்கின் மூலம் 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது, அதில் 6 கருப்பொருட்களின் துறைவாரியான அளவீடுகளை சாம்பியன் ஆஃப் சேன்ஞ் என்ற இணையதளத்தில் பதிவு செய்து காலாண்டிற்கு ஒரு முறை அளவீடுகளை ஆய்வு செய்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் சிறந்து விளங்கும் மாவட்டங்களைத் தேர்வு செய்து ஜே.ஐ.சி.ஏ நிதியின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தின் கீழ் 6 கருப்பொருட்களில் ஏப்ரல் 2025 முதல் ஜூன் 2025ம் காலாண்டில் வேளாண்மை மற்றும் நீர் வளங்கள் துறையில் முதல் இடத்தையும், மற்றும் இதர 5 துறைகளில் சிறந்த முன்னேற்றம் அடைந்ததன் அடிப்படையில் 112 மாவட்டங்களின் டெல்டா தரவரிசை பட்டியலில் தேசிய அளவில் முதலிடத்தினை பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’’என தெரிவித்துள்ளார்.

