கீழக்கரை, ஜூலை 29: கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் அப்துல்கலாம் 10ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட செஸ் கழகத்தின் ஏற்பாட்டில் ராமநாதபுரம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, கீழக்கரை ரோட்டரி கிளப், கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி இணைந்து மாவட்ட அளவிலான 26வது சதுரங்க போட்டியை நடத்தியது. இந்த போட்டியில் 330க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாநில குத்துச்சண்டை கழகத்தின் செயலாளரும், இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் பள்ளி தாளாளருமான முகைதீன் இப்ராஹிம், ரோட்டரி துணை ஆளுநரும் மாவட்ட செஸ் கழக தலைவருமான டாக்டர் சுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
புரவலர் தேவி உலகராஜ், ரோட்டரி சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசுகளை சிறப்பு விருந்தினர்களான ரோட்டரி சங்க முதல் பெண் டாக்டர் ரம்யா தினேஷ், நகர மன்ற துணை சேர்மன் ஹமீது சுல்தான், கவுன்சிலர் காசிம் ஆகியோர் வழங்கினர். மாவட்ட செஸ் கழக செயலாளர் ரமேஷ், பொருளாளர் குணசேகரன் மற்றும் பலர் விழா ஏற்பாடுகளை செய்தனர். ராஜேந்திர உடையார் தலைமையில் போட்டிகள் நடந்தது. இதில் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபல் ஜெஸ்டஸ், மேலாளர் மலைச்சாமி, செஸ் வீரர்களும், பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்கள், செஸ் கழகத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.