ராமநாதபுரம், ஜூலை 29: பசும்பொன்னிற்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பார்வர்ட் பிளாக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கமுதி கோட்டைமேட்டில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் சப்பானி முருகன் கலந்து கொண்டார். கூட்டம் மாவட்ட பொதுச்செயலாளர் லட்சுமணன் தலைமையிலும், கமுதி வடக்கு ஒன்றிய தலைவர் திருக்குமரன், கமுதி தெற்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி முன்னிலையிலும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளராக பிரசாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆலோசனை கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் அக்டோபர் 28 முதல் 30ம் தேதி வரை ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருகின்றது. தற்போது கமுதியில் அருப்புக்கோட்டை சாலை முதல் கோட்டைமேடு அருகே உள்ள முதுகுளத்தூர் சாலை சந்திப்பு வரை புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மார்க்கமாக வரும் வாகனங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.
இந்த சாலையின் தொடர்ச்சியாக பசும்பொன் வரை புறவழிச்சாலை அமைக்க வேண்டும். வருகிற ஆக.9ம் தேதி கமுதி வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக கட்சியின் 86ம் ஆண்டு துவக்க விழா, சுதந்திர தினம், மற்றும் ஆகஸ்ட் 6ம் தேதி முதுகுளத்தூரில் கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினர் சசிவர்ண தேவரின் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது. அன்றைய தினம் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.