மண்டபம்,நவ.28: மண்டபம் ஒன்றியம் மரைக்காயர் பட்டிணம் ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பைரோஸ் ஆசியம்மாள் தலைமை வகித்தார். இதை தொடர்ந்து ஊராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் நடைபெற்று முடிந்த திட்டப்பணிகள் குறித்து விவாதம் செய்யப்பட்டு திட்ட அறிக்கைகளை ஊராட்சி செயலர் நாகேந்திரன் பொதுமக்கள் மத்தியில் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொருளாதாரம் இன்றி வசித்து வரும் மீனவ மக்கள் வசிக்கக்கூடிய மரைக்காயர்பட்டிணம் ஊராட்சியை மண்டபம் பேரூராட்சியுடன் இணைப்பதற்கு அரசு எடுக்கும் முயற்சி கைவிடவேண்டும்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து பெய்து வரும் கனமழையால் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் மழைநீர் தேங்காமல் உடனடியாக அகற்ற வேண்டும்.அதுபோல அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்துள்ளதால், அதற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும். அதுபோல அரசு துவக்கப்பள்ளியில் மாணவ,மாணவிகள் அதிகமாக சேர்ந்து உள்ளதால் வகுப்பறை பற்றாக்குறையை போக்க கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மரைக்காயர் பட்டிணம் ஊராட்சி பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட ஊராட்சியின் வளர்ச்சிகளுக்கு ஏற்ப பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

