முதல்வரின் சீர்மிகு நல்லாட்சியில் அனைத்து கிராமங்களுக்கும் பஸ் இயக்கப்பட்டு வருகிறது: மாங்குடி எம்எல்ஏ பேச்சு
காரைக்குடி, நவ.26: முதல்வர் மு.க.ஸ்டாலின் சீர்மிகு நல்லாட்சியில் அனைத்து கிராமங்களுக்கும் டவுன்பஸ் இயக்கப்பட்டு வருகிறது என, மாங்குடி எம்எல்ஏ தெரிவித்தார். காரைக்குடி முதல் ஏம்பல் வரை மகளிர் விடியல் பயணம் டவுன்பஸ் சேவை துவக்க விழா நடந்தது. துணைமேயர் குணசேகரன் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ மாங்குடி பஸ் சேவையை துவக்கி வைத்து பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சீர்மிகு நல்லாட்சியில் அனைத்து கிராமங்களுக்கும் டவுன்பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த காலங்களில் நிறுத்தப்பட்ட பஸ்சேவையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தவிர பல்வேறு புதிய வழித்தடங்களில் பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. இதுவரை 20க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் அரசு பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. தற்போது காரைக்குடியில் இருந்து ஏம்பல் வரை மகளிர் விடியல் பயணம் பஸ் சேவையை துவக்கி உள்ளோம். கிராமப்புறங்கள் நகரங்களுக்கு இணையான வளர்ச்சியை பெற வேண்டும் என்பதற்காக முதல்வர் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். கிராமங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்து செயல்படுத்தி உள்ளார். தவிர இந்த தொகுதியை பொறுத்தவரை ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களின் குறைகளை கேட்டு அதனை பூர்த்தி செய்து வருகிறோம். மக்களுக்கான மகத்தான திட்டங்களை வழங்கும் முதல்வருக்கு நாம் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநகர தலைவர் சண்முகதாஸ், மாநகர செயலாளர் குமரேசன், நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ், கிட்டு, சிதம்பரம், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

