மண்டபம்,செப்.24: ராமநாதபுரம் அருகே நதிப்பாலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுப்பதற்கு ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபத்தில் ராமநாதபுரம்-ராமேஸ்வரம் பகுதிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நதிப்பாலம் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் ராமேஸ்வரம், ராமநாதபுரம் பனைக்குளம், பெருங்குளம் குறுக்குச்சாலை என நான்கு திசை வழிகளில் மத்தியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் எந்த நேரமும் நான்கு திசை பகுதிகளில் இருந்தும் வாகனங்கள் வந்து கொண்டே இருக்கும். இதனால் எந்த நேரமும் வாகனங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.
இந்நிலையில் சில ஆண்டுகளாக இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை பனைக்குளம், பெருங்குளம் ஆகிய குறுக்கு சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பல விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதங்களும் நடந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் பெரும் பதட்டமான ஒரு பகுதியாகவே இதுவரை காணப்படும். அதனால் விபத்துகளில் இருந்து மீட்பதற்கு இந்த பகுதியில் ரவுண்டானா அமைத்து முறையான சிக்னல் அமைத்து காவல்துறை கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.