ராமநாதபுரம், செப்.24: ராமநாதபுரத்தில் பணி நிரந்தரம் கோரி மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 90 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்பகிர்மானம், அனல், புனல் மற்றும் பொது கட்டுமான வட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் ராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு திட்ட தலைவர் காசிநாதன் தலைமை வகித்தார்.மறியல் போராட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் குருவேல், சிஐடியு மாவட்ட செயலாளர் சிவாஜி, திட்டச் செயலாளர் முருகன் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்கள் ஒரு பெண் உள்ளிட்ட 90 பேரை கேணிக்கரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மஹாலில் அடைத்தனர்.