ஆர்.எஸ்.மங்கலம், ஆக.19: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து நாகனேந்தல், காவனூர் செல்லும் சாலை ேசதமடைந்து உள்ளது. இதனால் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காவனூர் ஊராட்சியில் உள்ள நாகனேந்தல் மற்றும் காவனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வதற்கு உப்பூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பிரிந்து மேற்கண்ட கிராமங்களுக்கு செல்வதற்கான சாலை உள்ளது. இந்த சாலையில் சுமார் 2 கி.மீ தூரம் வரையிலும் குண்டும் குழியுமான சாலை சேதமடைந்துள்ளது.
இரவு நேரங்களில் பள்ளம், மேடு தெரியாமல் டூவீலர்களில் செல்பவர்கள் கீழே தடுமாறி விழுந்து விபத்திற்கு உள்ளாகின்றனர். ஆகையால் சாலையை சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.