ராமநாதபுரம், செப்.14: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கல்வி 40 டிஜிட்டல் திட்டம் துவக்க விழாவிற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார். உதவித் திட்ட அலுவலர் கணேச பாண்டியன் வரவேற்றார். நிகழ்ச்சியில் திட்டத்தை தொடங்கி வைத்த கலெக்டர், பள்ளிகளுக்கு ஸ்மார்ட் டிவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசும் போது, கல்வித் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கி ஒரு முக்கிய முன்னேற்றமாக நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் கல்வி 40 டிஜிட்டல் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கல்வி 40 திட்ட செயலியை கல்வி முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி தமிழ், ஆங்கிலம் சரளமாக வாசித்தல் மற்றும் எழுதுதல் கணித அடிப்படை திறன்கள் பெறச் செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களின் தற்போதைய நிலையினையும், இந்த செயலியை பயன்படுத்தியதால் பெறப்பட்ட முன்னேற்றத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
இந்த திட்டத்தின் மூலம் மண்டபம் ஒன்றியத்தில் 80 ஆசிரியர்கள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சேவை செய்யும் இந்த திட்டத்திற்கு எல்ஐசி எச்எப்எல் நிறுவனம் நிதியுதவி செய்துள்ளது. கல்வி 40 திட்டம், கிராமப்புற அரசு பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அரசு பள்ளியில் பயிலும் 3 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 16 ஆயிரம் வீடியோக்கள், 30 ஆயிரம் கேள்விகள், தினசரி விடுகதைகள், தினசரி அறநெறி கதைகள், முழுமையான மேம்பாட்டு வீடியோக்கள் ஆகியவற்றை விளம்பரம் இல்லாமல் மற்றும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு மாணவன் தொடக்க நிலையில் கற்றுக்கொள்ளும் கல்வி சிறப்பாக அமைவதன் மூலம் அவர்களுடைய எதிர்கால வாழ்கைக்கு உதவியாக அமையும் என்றார்.
நிகழ்ச்சியில், பம்பிள் பி டிரஸ்ட் நிறுவனர் பிரேம் குமார் கோகுலதாசன், எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மதுரை கிளை தலைவர் சயீத் களீமுத்தீன், தெற்கு மண்டல பொறுப்பாளர் யமுனா கொண்டி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், மண்டபம் வட்டார கல்வி அலுவலர்கள் ராமநாதன், பாலாமணி, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி40 குழுவினர் கலந்து கொண்டனர்.