ராமேஸ்வரம், செப்.14: இலங்கைக்கு கடத்துவதற்காக தனுஷ்கோடி அருகே மணல் தீடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பீடி இலைகள், இஞ்சிகளை இந்திய கடலோரக் காவல்படையினர் பறிமுதல் செய்தனர். தனுஷ்கோடி அருகே மணல் தீடை பகுதிகளிலில் இலங்கைக்கு கடத்துவதற்காக பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோரக் காவல்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனுஷ்கோடி மற்றும் மணல் தீடை பகுதிகளில் கடலோர காவல்படையினர் ரோந்து சென்றனர்.
அப்போது மூன்றாம் மணல் தீடையில் கடலோரக் காவல் படையினர் நடத்திய சோதனையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ பீடி இலைகள், 118 கிலோ இஞ்சியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் கடத்தல்காரர்கள் யாரேனும் பதுங்கி உள்ளனரா என்பது குறித்து சோதனை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மற்றும் இஞ்சி சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.