ராமநாதபுரம், செப்.14: ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மெஹ்பூப் அலிகான் தலைமை வகித்தார். வழக்கில் தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு உத்தரவுகளை வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக மாவட்ட நீதிமன்ற வளாகம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, திருவாடானை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் 10 அமர்வுகள் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில், குற்ற, வாகன விபத்து, காசோலை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி வராக் கடன்கள் மற்றும் சிறு வழக்குகள் உள்ளிட்ட மொத்தம் 5,923 வழக்குகள் பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 706 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.8 கோடியே 15 லட்சத்து 67 ஆயிரத்து346 நிவாரண தொகையாக வழக்காடிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கூடுதல் மாவட்ட நீதிபதி மோகன்ராம், விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி கவிதா, தலைமை குற்றவியல் நீதிபதி ஜெய சுதாகர், சார்பு நீதிபதி மும்தாஜ், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பாஸ்கர், நீதித்துறை நடுவர் எண்-1 நிலவேஸ்வரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி கேத்திரினி ஜெபா சகுந்தலா, வழக்கறிஞர் சங்க தலைவர் அன்புசெழியன் மற்றும் வழக்கறிஞர்கள், வழக்காடிகள் கலந்து கொண்டனர்.