ராமநாதபுரம், அக்.12: முதுகுளத்தூரில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு வனம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை வகித்தார். பரமக்குடி ஆர்.டி.ஓ சரவணபெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன் வரவேற்றார். முகாமினை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்து பேசும்போது, ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான திட்டங்களில் ஒன்றான நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் எனும் மக்களை தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்ற வகையில் செயல்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனை சென்றால் குறைந்தது ரூ.15ஆயிரம் செலவு ஆகும்.
ஆனால் இங்கு ரத்த பரிசோதனை முதல் பொதுமருத்துவம், குழந்தை, மகளிர் மருத்துவம், இதயம் உள்ளிட்ட உடலின் முக்கிய உறுப்புகள் அனைத்திற்கும் பரிசோதனைகள் மருத்துவம் பார்க்கப்பட்டு, தேவைபடுவோருக்கு உயரிய சிகிச்சை பரிந்துரை மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்த மகத்தான திட்டம் பொதுமக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான பழுதடைந்த மரங்கள் ஏலம் விடப்பட்டு, கூடுதல் எண்ணிக்கையில் புதிய மரங்கள் நட்டு வளர்க்கப்படும். வனத்துறைக்கு சொந்தமான 3600 ஏக்கர் காலியிடங்களில் புதிய தொழிற்கூடங்கள் அமைக்கப்பட உள்ளது. இதனால் 7,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார். வட்டார மருத்துவர் ராஜேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் பேரூராட்சி சேர்மன் ஷாஜகான், சோனை மீனாள் கல்லூரி தாளாளர் சோ.பா.ரெங்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.