மண்டபம்,அக்.12: மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தக்கோன்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரமுடையான் கிராமத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்களின் உதவி இயக்குனர் பத்மநாபன் வரவேற்றார். ஊராட்சி செயலர் விஸ்வநாதன் கூட்டப்பொருள் வாசித்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் கலெக்டர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அதன் பின்னர் பொதுமக்கள் வைத்த முக்கிய கோரிக்கையான பேருந்து வசதிகள் ஏற்படுத்துதல், பேருந்து நிறுத்தம் அமைத்தால், மழை காலங்களை எதிர்நோக்கி சுற்றுச்சூழலை பாதுகாத்தல், சாலை வசதிகளை ஏற்படுத்துதல், 109 நாள் திட்டத்திலும், சுந்தரம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலை பண்ணை சார்பிலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்ட நடவடிக்கை எடுத்தல், பட்டா வழங்குதல் அரசு நிலம் வழங்குதல் போன்ற கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் கலெக்டர் உறுதி அளித்தார். கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் திவ்யான் ஷூ நிகான், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயமுருகன், மண்டல அலுவலர் ராமநாதன் மற்றும் சுகாதாரப்பிரிவு மருத்துவ பிரிவு மின்சாரப் பிரிவு உட்பட அனைத்து துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர் கூட்டத்தில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சோமசுந்தர் நன்றி கூறினார்.