வெளியூரில் செயல்படுகிறது விஏஓ ஆபீசுக்கு வீண் அலைச்சல்: உள்ளூரில் புதிய கட்டிடம் கட்ட மக்கள் கோரிக்கை
திருவாடானை, டிச.11: திருவாடானை அருகே வாடகை கட்டிடத்தில் செயல்படும் விஏஓ அலுவலகத்திற்கு நீண்டதூரம் செல்லவேண்டி உள்ளதால் கிராமமக்கள் சிரமமடைந்து வருகின்றனர். உள்ளூர் பகுதியில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே சிறுகம்பையூர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகம் சேதமடைந்ததால், இடித்து அகற்றி அப்புறப்படுத்தி விட்டனர்.
மேலும் சிறுகம்பையூர் கிராம நிர்வாக அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் சிறுகம்பையூர், பூனைக்குட்டிவயல், மயிலாடுவயல், கஞ்சக்கோன்வயல், ஆரியன்வயல், பச்சரவக்கோட்டை, நோக்கன்வயல், முடுக்குவயல், பெரிய குடியிருப்பு உள்ளிட்ட சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் சாதி, வருமானம், இருப்பிடம், விதவைச்சான்று, முதல் பட்டதாரி சான்று, ஆண்வாரிசு இல்லா சான்று, அடையாளச் சான்று, கணவனால் கைவிடப்பட்டவர் சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகளைப் பெறுவதற்காக இந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தினசரி அலைந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக இந்த கிராம நிர்வாக அலுவலகம் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளையபுரம் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் எவ்வித பாதுகாப்பு வசதியும் இன்றி செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் அவர்களுக்குத் தேவையான சான்றுகள் பெற சிரமப்பட்டு வருகின்றனர். சான்றிதழ் பெற வீண் அலைச்சல் ஏற்படுவதுடன் கடும் சிரமப்படுவதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகையால் சிறுகம்பையூர் பகுதியில் பழைய விஏஓ அலுவலகம் இடிக்கப்பட்டு தற்சமயம் காலியாக உள்ள இடத்தில் புதிய விஏஓ அலுவலகம் கட்டித்தந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


