Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ராமநாதபுரம்-ராமேஸ்வரம் இடையே மின்பாதை பணிகளை துரிதபடுத்த வேண்டும்: கூடுதல் ரயில்கள் இயக்க வலியுறுத்தல்

மானாமதுரை, ஆக.4: ராமநாதபுரம்-ராமேஸ்வரம் இடையே மின்பாதை அமைக்கும் பணிகள் தாமதமாக நடப்பதால் மானாமதுரையுடன் ரயில்கள் நிறுத்தப்படுகின்றன. பணிகளை விரைவாக முடித்து இப்பாதையில் கூடுதல் ரயில்களை இயக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் டீசல் ரயில் இஞ்சின்களை நிறுத்தி விட்டு மின்சார ரயில்களை இயக்க அனைத்து ரயில்பாதைகளும் மின்மயமாக்கும் பணிகள் கடந்த 2018ம் ஆண்டு துவங்கியது. இவற்றில் தென்மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மின்பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தனியார் பங்களிப்புடன் துவக்கப்பட்டது. அதன்பின் கொரோனா காரணமாக பணிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மீண்டும் இப்பணிகள் கடந்த 2021 அக்டோபரில் துவங்கியது. அதன்பிறகு மதுரை- மானாமதுரை, மானாமதுரை-விருதுநகர், திருச்சி- காரைக்குடி, காரைக்குடி- மானாமதுரை, மானாமதுரை- ராமநாதபுரம் உள்ளிட்ட முக்கிய பாதைகள் மின்மயமாக்கும் பணிகள் முடிந்து இந்த வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ராமநாதபுரத்தில் இருந்து மண்டபம்- ராமேஸ்வரம் இடையே உள்ள பாதைகளில் மின்பாதை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. பரமக்குடி சத்திரக்குடி இடையே தண்டவாள பணிகளும் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் மானாமதுரை வழியாக காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை ரயில்கள் இயக்கப்படாமல் மானாமதுரையிலேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. இப்பணிகளை விரைந்து முடித்தால் வடமாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் ரயிலை தாமதமின்றி இயக்கவும், மேலும் புதிய ரயில்களை நீட்டிப்பு செய்யவும், டீசல் இஞ்சினுக்கு மாற்றாமல் நேரடியாக ராமேஸ்வரம் வரை செல்ல முடியும் என்பதால் மின்பாதை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பத்மநாதன் கூறுகையில், ‘‘திருச்சி- காரைக்குடி பாதை மின்மயமாக்கப்பட்டதால் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையில் இருந்து காரைக்குடி வரை ஒரே இஞ்சின் மூலம் வந்துசேருவதால் பயணம் நேரம் குறைகிறது. ஆனால் ஓகா-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மின்சார இஞ்சினை மதுரையில் டீசல் லோகோவாக மாற்ற அரை மணிநேரத்திற்கு மேல் ஆகிறது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் ரயிலுக்கும் இஞ்சின் மாற்ற நேரம் ஆகிறது.

அதேபோல திருச்சி காரைக்குடி மார்க்கமாக ராமேஸ்வரம் வரும் பனாரஸ் எக்ஸ்பிரஸ், ஸ்ரத்த சேது, புவனேஸ்வர், அயோத்தி கண்டோன்மென்ட் வாராந்திர ரயில்களும், தினமும் இயங்கும் சேது எக்ஸ்பிரஸ், போட்மெயில், தாம்பரம் பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு திருச்சியில் இஞ்சின் மாற்றி இயக்க நேரம் ஆகிறது. எனவே ராமநாதபுரம்- ராமேஸ்வரம் இடையே மின்மயமாக்கும் பணிகளை துரிதப்படுத்தினால் ரயில்களின் பயணநேரம் குறையும் எனவே விரைவில் மின்மயமாக்கும் பணிகளை துரிதப்படுத்தவேண்டும்’’ என்றார்.