ராமநாதபுரம், டிச.2: ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர் நல சங்கம் சார்பில் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்தில் ஆட்டோ வழங்க ஏற்பாடு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பெண் ஓட்டுநர்களை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்தில் ஆட்டோ வழங்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் நலவாரியத்தில் 200 பெண் தொழிலாளர்களுக்கு நல வாரியத்தில் பதிவு செய்தும், ஓட்டுநர் உரிமம் இல்லாத பெண் தொழிலாளர்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை பெற்று தருவதற்கு சிறப்பு நல வாரிய பதிவு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு தமிழ்நாடு ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அப்துல் ரஹிம் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பிச்சாண்டி பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இந்த முகாமில் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்தில் ஆட்டோ பெற்றுத் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

