Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாலையை சீரமைக்க கோரி தண்ணீரில் நீச்சலடித்து போராட்டம்

கமுதி, டிச.2: கமுதி அருகே டி.குமாரபுரத்தில் கரடு முரடான சாலையில் மழை தண்ணீர் தேங்கியதால், சாலையில் கிடக்கும் தண்ணீரில் நீச்சல் அடித்து போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். கமுதி தாலுகா பெருநாழி அருகே உள்ளது டி.குமாரபுரம் கிராமம். இந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் அன்றாட தேவைக்கு பெருநாழி சென்று சாயல்குடி மற்றும் வெளியூர்களுக்கு செல்ல பயன்படுத்தும் இங்குள்ள கிராமச்சாலை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக முற்றிலும் மோசமாக யாரும் நடந்து செல்லாத முடியாத அளவில் உள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

பழுதான சாலையால் இந்த கிராமத்திற்கு இலவச மருத்துவ சேவையான 108 வாகனம் கூட வருவது இல்லை. மருத்துவ உதவி என்றால் இருசக்கர வாகனம் மூலம் பெருநாழி வந்து, அதன் பின்னர் 108 வாகனம் மூலம் மேல் சிகிச்சைக்காக வெளியூர் செல்லும் நிலை உள்ளது. வாடகை கார் சேவை கூட இந்த கிராமத்தின் மோசமான சாலையை கருத்தில் கொண்டு முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. இந்த கிராமத்திற்கு பேருந்து வசதியும் இல்லை.

இங்கு இருக்கும் மக்கள் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கூலி தொழிலாளர்கள் என்பதால் தினசரி இந்த குண்டும் குழியுமாக உள்ள சாலையில் பயணிக்கும் நிலையில் உள்ளனர். கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையினால் பள்ளங்கள் முழுவதும் நீர் நிரம்பி பாதையே தெரியாத அளவிற்கு சாலையில் தண்ணீர் உள்ளது. பல முறை அரசு அதிகாரிகளிடம், மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த பயனும் இல்லை என்று இக்கிராம மக்கள் கூறுகின்றனர்.

மோசமான சாலையை சீரமைத்து புதிய சாலை அமைத்து தரக்கோரி, டி.குமாரபுரம் கிராமமக்கள் சார்பில் ஆண்கள் 2 பேர் சாலையில் தேங்கிய கலங்கிய நீரில் ஷாம்பு போட்டு குளித்தும், நீச்சல் அடித்தும், பெண்கள் மற்றும் வயதானவர்கள் தேங்கி கிடக்கும் தண்ணீரில் குலவை இட்டு, மலர் தூவி சாலை வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்தினர். சாலையை சீரமைக்க வில்லை என்றால் விரைவில் கிராம மக்கள் அனைவரும் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.