திருப்பூர், ஜூலை 23: திருப்பூர், திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் குடிநீர் விநியோகம் குறித்து நகராட்சி பொறியாளர் ராமசாமி தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இயக்குனர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் வீடுகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரம் மற்றும் அளவு, அழுத்தம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் நகராட்சி பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் 27 வார்டுகள் உள்ளது.
இந்த வார்டுகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி பொறியாளர் ராமசாமி, பொருத்துனர் ஜான்சன், நகராட்சி எலெக்ட்ரீசியன் ரவிக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நகராட்சி 15, 16,18 ஆகிய வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். அதேபோல் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல் தண்ணீரின் அழுத்தம் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.