இலுப்பூர், அக்.10: அன்னவாசல் மற்றும் இலுப்பூர் பகுதியில் உள்ள பகுதிகளில் உள்ள சத்ரு சம்ஹாரமூர்த்தி கோயில்களில் குரு பூஜை விழா நடந்தது. அன்னவாசல் அருகே தான்றீஸ்வரம், வாதிரிப்பட்டி, காலாடிப்பட்டி சத்திரம், இலுப்பூரில் உள்ள தீயணைப்பு நிலைய வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சத்ரு சம்ஹாரமூர்த்தி கோயிலில் குருபூஜை நேற்று நடைபெற்றது. 87வது ஆண்டாக நடைபெற்ற இக்குருபூஜை விழாவையொட்டி கோயில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம், கரும்பு தொட்டில், மாவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். இலுப்பூர், அன்னவாசல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள்
கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சத்ருசம்ஹாரமூர்த்தி சுவாமி மின் அலங்கார தேரில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.