திருமயம். ஜூலை 29: அரிமளம் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலில் ஆழ்துளை கிணறு அமைப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள மீனிகந்தா கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நூற்றாண்டு பழமை வாய்ந்த சேது விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் பல்வேறு காரணங்களுக்காக பல ஆண்டுகளாக புனரமைப்பு செய்யாமல் இருந்து வந்தது. இதனிடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீனிகந்தா கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து கோயிலை புனரமைப்பு செய்ய அனுமதி பெற்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கோயில் புனரமைப்பு பணி நன்கொடையாளர் உதவியுடன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மீனிகந்தா கிராமம் அருகே உள்ள கும்மங்குடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் விநாயகர் கோயிலுக்கு நன்கொடையாக ஆழ்துளை கிணறு அமைக்க இந்து அறநிலையத்துறை உதவியுடன் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று விநாயகர் கோயில் அருகே கும்மங்குடி கிராம மக்கள் ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு மீனிகந்தா கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து முறையான ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு பணிகளை தொடங்க கேட்டுக்கொண்டனர். இதில் இரு கிராமத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும் சூழல் உருவாகியது. இதனால் பொன்னமராவதி டிஎஸ்பி கண்ணன் தலைமையில் கே.புதுப்பட்டி இன்ஸ்பெக்டர் தங்கம் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதே சமயம் கோயில் வளாகத்தில் இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கூடியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே ஆழ்துளை கிணறு அமைக்கும் இயந்திரம் வராததால் இன்று (29ம் தேதி) காலை 10 மணி அளவில் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு ஆழ்துளை கிணறை அமைக்க வேண்டும் என மீனிகந்தா கிராமத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இச்சம்பவங்களால் நேற்று காலை முதலே அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.