கந்தர்வகோட்டை, ஆக.2: புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் வழிகாட்டுதலின்படி கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் தற்காப்பு கலை பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாரதிதாசன் செய்திருந்தார்.அதன்படி அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான ரகமதுல்லா தற்காப்பு கலை பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். தற்காப்பு கலையானது பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குற்றசம்பவங்கள் ஆகிய பிரச்சனைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான பயிற்சியாக வழங்கப்படுகிறது.
சுய தற்காப்பு கலை பயிற்சியின் மூலம் மாணவிகள் உடல் வலிமை, மன உறுதி, தன்னம்பிக்கை எந்த சூழலையும் தனியாக எதிர்கொள்ளும் திறன், தன்னையும் தன் சுற்றத்தாரையும் பாதுகாத்துக் கொள்ளும் திறன், சூழலை சாதகமாக கையாளும் திறன் முடிவெடுக்கும் தன்மை மேற்குறிப்பிட்ட நற்பண்புகளை பயிற்சி மூலம் வளர்த்துக் கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சிந்தியா, நிவின் செம்ம ராகினி சகாய ஹில்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தற்காப்பு கலை பயிற்சியாளர் கதிர்காம் பயிற்சி வழங்கினார்.