புதுக்கோட்டை, ஆக.3: புதுக்கோட்டையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய திடீர் மழை பெய்தது. இத்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெளியே வர முடியாமல் இருந்தனர். குறிப்பாக ஆடி காத்துடன் அவதிக்கு உள்ளானதால் வெப்ப காற்றாக இருந்தது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை நகர் பகுதிகளான மச்சுவாடி, பிருந்தாவனம், கீழ ராஜா வீதி, மணி பள்ளம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது. மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் கடந்த சில வாரங்களாகவே ஆடி காற்றும் மற்றும் கடும் வெயிலும் இருந்து வந்தது. இதனால் பயிர்கள் வாடின. மேலும் குளங்களில் நீர் வறண்ட நிலையில் காணப்பட்டது. நிலங்களில் இருந்த புல் பூண்டு காய்ந்து போனதால் கால்நடைகளுக்கு உரிய தீவனம் கிடைக்கவில்லை.இந்த நிலையில் இரவு திடீரென மழை பெய்ததால் வெப்பம் குறைந்து காற்றில் கலந்த தூசி குறைந்தது. மேலும் மழையால் ஆழ்துளை கிணற்றின் நீர்மட்டம் உயரும். தற்சமயம் பெய்த மழை பயிர்களுக்கு ஏற்றது என விவசாயிகள் தெரிவித்தனர்.