புதுக்கோட்டை, ஜூலை 25: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற அடிப்படையில் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். கந்தர்வகோட்டைக்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ விஜயபாஸ்கார் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக வெள்ளை முனியன் கோயில் பகுதியில் டிராக்டர் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் எம்எல்ஏக்கள் விஜயபாஸ்கர், காமராஜ் உடன் இருந்தனர்.
கந்தர்வகோட்டை காந்தி சிலை முன் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
கந்தர்வகோட்டை தொகுதி விவசாயிகள் நிறைந்த தொகுதி. விவசாய தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நிறைய திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து நிறைவேற்றினோம். கூட்டுக் குடிநீர் திட்டம் இரண்டு கட்டமாக சுமார் 574 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களை தீட்டி நேரடியாக நானே எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது வந்து திறந்து வைத்தேன். இதனால் 2306 கிராமங்கள் பயன்படுகிறது. எனவே அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.