அறந்தாங்கி, ஜூலை 25: ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி, மணமேல்குடி கடற்கரையில் பக்தர்கள் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
கட்டுமாவடி
ஆடி அமாவாசை, தை அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கமாகும். இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கட்டுமாவடி ராமநாத சுவாமி ஆலயத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டது. பின்னர் கடலில் புனித நீராடி இராமநாத சுவாமி கோயிலில் அபிஷேக ஆராதனை செய்து முன்னோர்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
மணமேல்குடி
மணமேல்குடி அருகே உள்ள கோடியக்கரை புனித நீராட சிறந்த இடமாகும். இந்த கடற்கரையில் புனித நீராடிய பிறகு இங்குள்ள விநாயகர் ஆலயத்தில் வழிபடுவது வழக்கமாகும். அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
ஆடி அம்மாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் முன்னோர்களுக்கு கடற்கரை குளக்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் பிண்டங்கள் வைத்து தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை கீழ ராஜ வீதி அருகே உள்ள சாந்தாரம்மன் கோயில் பல்லவன் குளக்கரையில் காலை முதல் பொதுமக்கள் மறைந்த தாய். தந்தையினர் மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தண்ணீர் எடுத்து தர்ப்பணம் கொடுத்து நீர் நிலைகளில் விட்டுச் சென்றனர். மேலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு சாந்தாரம்மன் கோயில் பகுதியில் பூசணிக்காய், கீரை வகைகள், வாழை இலைகள் விற்கப்பட்டது. மேலும் தர்ப்பணம் கொடுக்க கூட்டம் அதிகரிப்பால் தர்ப்பணம் கொடுப்பதற்கு பூஜை தட்டுக்கள் வாங்க முண்டியடித்த மக்கள் நீண்ட வரிசையில் குவிந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.